சென்னை அண்ணா நகர்...
வாலிபர் ஒருவர் கையில் சின்ன பேக்குடன் ஆட்டோவை நோக்கி வந்தார்.
கஸ்டமர் யாரோ வண்டியில் விட்டு சென்ற தினதந்தியை திருப்பி கொண்டு இருந்தார் ஆட்டோ டிரைவர் சிதம்பரம்.
அண்ணே... அம்பத்தூர் வரைக்கும் போகணும், எவ்வளவுணே ஆகும் ..? - என்று கேட்டார் அந்த வாலிபர்.
ஆட்டோ வராது தம்பி, ஸ்கூல்ல இருந்து பசங்கள கூப்ட்டு போகணும். பெரிய இடத்து பசங்க... லேட்டாச்சின்னா பிரச்சனையாகிடும் என்றார் சிதம்பரம்.
அவசரம்ண்ணே - பரபரப்புடன் சொன்னார் வாலிபர்.
2.20வது ஆச்சி... 2.30க்கு எல்லாம் ஸ்கூல் விட்டுடும். பசங்க வெளியே வர்றதுக்கு 10 நிமிசம் ஆகும்.
தம்பி... எங்க போகணும்னு சொன்னீங்க?
அம்பத்தூர்ண்ணே...
அம்பத்தூர்ல எங்க?
எஸ்டேட் பஸ் டிப்போக்கு பின்னாடி...
பாடி வழியா போன டிராபிக்கா இருக்கும், முகப்பேறு வழியா போகலாம். போறதுக்கு 10 நிமிசம், வர்றதுக்கு 10 நிமிசம் கரெக்டா இருக்கும். ஏறுங்க, 30 ருபாய் குடுங்க தம்பி என்றார் சிதம்பரம்.
அண்ணே, 30 ரூபா அதிகம்ண்ணே
சரி 25 குடுங்க.... ஏறுங்க என்றார் சிதம்பரம்.
புகையை கக்கி கொண்டு வாலிபருடன் புறப்பட்டது அந்த ஆட்டோ...
25 ரூபாய்க்கும் பெட்ரோல் போட்டுடணும் என்று எண்ணி கொண்டே, ஆக்சிலரேட்டரை அழுத்தினார் சிதம்பரம்.
முகபேறில் வலது எடுத்து எஸ்டேட் ரோட்டில் சீறி பாய்ந்தது ஆட்டோ...
வழக்கம் போல் இந்த மழைக்கும் ரோடு ஆங்காங்கே பிளந்து கொண்டு இருந்தது. வளைத்து, உடைத்து லாவகமாய் ஓட்டி எஸ்டேட் பஸ் டிப்போ கிட்ட போகும் போது. 12வது நிமிடம் கரைந்து கொண்டு இருந்தது.
அண்ணே - இங்கே நிப்பாட்டுங்க, இறங்கிறேன். உங்களுக்கு லேட்டாச்சி. திரும்பபோறதுக்கு 10 நிமிசம். எப்படியும் 2.45க்கு எல்லாம் பசங்களை கூப்பிட்டு கிளம்பிடலாம். கரெக்டா இருக்கும்... என்று சொல்லிக்கொண்டே கையில் ரெடியாய் வைத்து இருந்த 2 பத்து ரூபாய் தாளையும்,ஒரு 5 ரூபாய் காயினையும் சிதம்பரம் கையில் தினித்து விட்டு பட்டென்று இறங்கி பறந்தார் அந்த வாலிபர்.
"நல்ல கஸ்டம்மர்ப்பா..." என்று எண்ணி கொண்டே ஆட்டோவை திருப்பும்ப்போது தான் கவனித்தார், பின் சீட்டில் அந்த வாலிபர் விட்டு சென்ற பேக்கை.
சட்டென்று அந்த வாலிபர் போன வழியில் எட்டி பார்த்தார் சிதம்பரம்.
பஸ் டிப்போ வாயிலில் நின்று கொண்டு இருந்தார் அந்த வாலிபர். ஆட்டோவை அப்படியே விட்டு விட்டு வாலிபரிடம் போன சிதம்பரம், "தம்பி, பேக்கை மறந்துட்டீங்க, இந்தாங்க..." என்று பேக்கை குடுத்த பிறகு ஆட்டோவை கிளப்பி, திருப்பி கொண்டு ஸ்கூல் வாசலில் போயி நிற்கையில் அவருடைய வாட்ச் 2.45யை தொட்டு இருந்தது.
அவர் கூட்டி போற பசங்க காத்திருந்தனர்.
ஆட்டோ தாத்தா, ஏன் லோட்டு அம்மாகிட்ட சொல்லுறேன் வாங்க - என்று ஒரு பொடிசு சிதம்பரமிடம் கடித்து கொண்டது.
லேட்டாச்சி பாப்பா... சரி சரி, ஏறுங்க, ஏறுங்க... - என்று சொல்லி கொண்டே 9 பிள்ளைகளையும் ஆட்டோவில் அடைத்து ஓவ்வொரு வீடாக இறக்கி விடும் பொழுது மணி 4 ஆகி இருந்தது.
பங்கில் பெட்ரோல் போட்டு கொண்டு, மாலையில் நான்கைந்து சவாரியுடன் தொழிலை முடித்து கொண்டு 8.30க்கு எல்லாம், வீடு திரும்பிய பொழுது சன் டிவியில் நியுஸ் ஓடிக்கொண்டு இருந்தது.
டீவியில் காண்பித்து கொண்டு இருந்த முகத்தை ஏங்கேயோ பார்த்ததை போல் இருந்ததால் நியுசை உற்று கவனித்தார் சிதம்பரம்.
"சென்னை அம்பத்தூர் பஸ் டிப்போவில் இன்று மாலை சந்தேக படும் படியாக திரிந்த வாலிபனை போலிசார் கைது செய்து விசாரிக்கும் பொழுது அவன் தீவிரவாதி என்று தெரிய வந்தது. அவன் கையில் வைத்து இருந்த பேக்கில் ஒரு டிபன் பாக்ஸ் வெடி குண்டு ஒன்று சிக்கியது. மேலும் விசாரணையில்
"சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல பள்ளிகூடத்தில் படிக்கும் மாணவர்கள் பயணிக்கும் ஆட்டோவில் குண்டு வைக்க திட்டமிட்டு இருந்ததாகவும், அந்த திட்டம் செயல்படுத்த முடியாமல் போனதாகவும்" தீவிரவாதி தெரிவித்தான்...
உச்சந்தலை வேர்த்து நின்றார் சிதம்பரம்.
- சுவாமிநாதன் பாலசுப்ரமணியன்
Saturday, November 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment