Wednesday, November 26, 2008

தீவிரவாதமும் காந்தியவாதமும்

இந்த அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து உயிரினத்திலும் கற்கவும், கற்றதால் ஏற்படும் மாறுதல்களுக்கு தன்னை அதிவேகமாக உட்படுத்தி கொள்ள தக்கது மனித இனம். இந்த ஒரு காரணத்தினால்தான் நாம் மிருகங்களிடமிருந்து தளைத்து செழித்து வாழ்கிறோம். கடந்த பல ஆண்டுகளாக மனித இனத்திற்குள் ஏற்பட்டுள்ள தீவிரவாதம் என்ற நோயை நாம் கையாளும் விதத்ததை பார்த்தால் நாம் நமது கற்றலும் கற்றதால் ஏற்படும் மாற்றத்தை உட்படுத்தி கொள்ளுதலும் என்ற அடிப்படை குணாதியசத்தை இழந்து விட்டோமோ என்று அஞ்ச தோன்றுகிறது.


தீவிரவாதிகளை அடையாளம் தேடும் மனதிற்கு தீவிரவாதத்தை அடையாளம் காணத் தெரியவில்லை. தீவிரவாதம் என்பது ஒரு மனநோய். தீவிரவாதி என்பவன் அந்த நோயால் பாதிக்கப்பட்ட சராசரி மனிதன். நோயாளியை கொன்றுவிடுவதன் மூலம் நோயை கட்டுப்படுத்தி விடலாம் என்பது அறிவுமிக்க மனித இனம் செய்ய வேண்டிய காரியமில்லை. அதை விடுத்து இந்த நோயின் காரணம் என்ன, என்பதை கற்க வேண்டும். எந்த சமுதாய ஏற்றத்தாழ்வு சூழ்நிலையால் இது உருவானது, நம் முன்னோர்கள் செய்த தவறு என்ன, எந்த ஒரு கொடும் செயலுக்கும் மருந்தான அன்பையும், காதலையும் இந்த நோயால் பதிக்க பட்டவர்களிடம் எப்படி செலுத்துவது, மேலும் நம் சக மனிதர்கள் இந்த நோயால் பாதிக்கபடாமல் தடுக்க செய்ய வேண்டிய வழிகள் என்ன என்பவற்றை நாம் அனைவரும் கற்க வேண்டும். கற்றதால் ஏற்படவேண்டிய மாற்றத்தை காதலையும், அன்பையும் குழைத்து செலுத்த வேண்டும்.

இவை அனைத்தையும் செய்ய தேவையான அன்பும், பொறுமையும் நமக்கு இல்லையன்றால் உடனடி சிகிச்சை அளிக்க படவேண்டியது நமக்குத்தான், தீவிரவாதிகளுக்கு அல்ல. தீவிரவாதத்திற்கு தேவையான மருந்து காந்தியவாதத்தில் இருக்கின்றது.

காந்தி சொல்கிறார்

"அன்பே ஆயுதம்"!
ஆகையால்
ஆயுதம் செய்.


- சுவாமிநாதன் பாலசுப்ரமணியன்

Saturday, November 15, 2008

அவசர சவாரி

சென்னை அண்ணா நகர்...

வாலிபர் ஒருவர் கையில் சின்ன பேக்குடன் ஆட்டோவை நோக்கி வந்தார்.

கஸ்டமர் யாரோ வண்டியில் விட்டு சென்ற தினதந்தியை திருப்பி கொண்டு இருந்தார் ஆட்டோ டிரைவர் சிதம்பரம்.

அண்ணே... அம்பத்தூர் வரைக்கும் போகணும், எவ்வளவுணே ஆகும் ..? - என்று கேட்டார் அந்த வாலிபர்.

ஆட்டோ வராது தம்பி, ஸ்கூல்ல இருந்து பசங்கள கூப்ட்டு போகணும். பெரிய இடத்து பசங்க... லேட்டாச்சின்னா பிரச்சனையாகிடும் என்றார் சிதம்பரம்.

அவசரம்ண்ணே - பரபரப்புடன் சொன்னார் வாலிபர்.

2.20வது ஆச்சி... 2.30க்கு எல்லாம் ஸ்கூல் விட்டுடும். பசங்க வெளியே வர்றதுக்கு 10 நிமிசம் ஆகும்.
தம்பி... எங்க போகணும்னு சொன்னீங்க?

அம்பத்தூர்ண்ணே...

அம்பத்தூர்ல எங்க?

எஸ்டேட் பஸ் டிப்போக்கு பின்னாடி...

பாடி வழியா போன டிராபிக்கா இருக்கும், முகப்பேறு வழியா போகலாம். போறதுக்கு 10 நிமிசம், வர்றதுக்கு 10 நிமிசம் கரெக்டா இருக்கும். ஏறுங்க, 30 ருபாய் குடுங்க தம்பி என்றார் சிதம்பரம்.

அண்ணே, 30 ரூபா அதிகம்ண்ணே

சரி 25 குடுங்க.... ஏறுங்க என்றார் சிதம்பரம்.

புகையை கக்கி கொண்டு வாலிபருடன் புறப்பட்டது அந்த ஆட்டோ...

25 ரூபாய்க்கும் பெட்ரோல் போட்டுடணும் என்று எண்ணி கொண்டே, ஆக்சிலரேட்டரை அழுத்தினார் சிதம்பரம்.

முகபேறில் வலது எடுத்து எஸ்டேட் ரோட்டில் சீறி பாய்ந்தது ஆட்டோ...





வழக்கம் போல் இந்த மழைக்கும் ரோடு ஆங்காங்கே பிளந்து கொண்டு இருந்தது. வளைத்து, உடைத்து லாவகமாய் ஓட்டி எஸ்டேட் பஸ் டிப்போ கிட்ட போகும் போது. 12வது நிமிடம் கரைந்து கொண்டு இருந்தது.

அண்ணே - இங்கே நிப்பாட்டுங்க, இறங்கிறேன். உங்களுக்கு லேட்டாச்சி. திரும்பபோறதுக்கு 10 நிமிசம். எப்படியும் 2.45க்கு எல்லாம் பசங்களை கூப்பிட்டு கிளம்பிடலாம். கரெக்டா இருக்கும்... என்று சொல்லிக்கொண்டே கையில் ரெடியாய் வைத்து இருந்த 2 பத்து ரூபாய் தாளையும்,ஒரு 5 ரூபாய் காயினையும் சிதம்பரம் கையில் தினித்து விட்டு பட்டென்று இறங்கி பறந்தார் அந்த வாலிபர்.

"நல்ல கஸ்டம்மர்ப்பா..." என்று எண்ணி கொண்டே ஆட்டோவை திருப்பும்ப்போது தான் கவனித்தார், பின் சீட்டில் அந்த வாலிபர் விட்டு சென்ற பேக்கை.

சட்டென்று அந்த வாலிபர் போன வழியில் எட்டி பார்த்தார் சிதம்பரம்.

பஸ் டிப்போ வாயிலில் நின்று கொண்டு இருந்தார் அந்த வாலிபர். ஆட்டோவை அப்படியே விட்டு விட்டு வாலிபரிடம் போன சிதம்பரம், "தம்பி, பேக்கை மறந்துட்டீங்க, இந்தாங்க..." என்று பேக்கை குடுத்த பிறகு ஆட்டோவை கிளப்பி, திருப்பி கொண்டு ஸ்கூல் வாசலில் போயி நிற்கையில் அவருடைய வாட்ச் 2.45யை தொட்டு இருந்தது.

அவர் கூட்டி போற பசங்க காத்திருந்தனர்.

ஆட்டோ தாத்தா, ஏன் லோட்டு அம்மாகிட்ட சொல்லுறேன் வாங்க - என்று ஒரு பொடிசு சிதம்பரமிடம் கடித்து கொண்டது.

லேட்டாச்சி பாப்பா... சரி சரி, ஏறுங்க, ஏறுங்க... - என்று சொல்லி கொண்டே 9 பிள்ளைகளையும் ஆட்டோவில் அடைத்து ஓவ்வொரு வீடாக இறக்கி விடும் பொழுது மணி 4 ஆகி இருந்தது.

பங்கில் பெட்ரோல் போட்டு கொண்டு, மாலையில் நான்கைந்து சவாரியுடன் தொழிலை முடித்து கொண்டு 8.30க்கு எல்லாம், வீடு திரும்பிய பொழுது சன் டிவியில் நியுஸ் ஓடிக்கொண்டு இருந்தது.

டீவியில் காண்பித்து கொண்டு இருந்த முகத்தை ஏங்கேயோ பார்த்ததை போல் இருந்ததால் நியுசை உற்று கவனித்தார் சிதம்பரம்.

"சென்னை அம்பத்தூர் பஸ் டிப்போவில் இன்று மாலை சந்தேக படும் படியாக திரிந்த வாலிபனை போலிசார் கைது செய்து விசாரிக்கும் பொழுது அவன் தீவிரவாதி என்று தெரிய வந்தது. அவன் கையில் வைத்து இருந்த பேக்கில் ஒரு டிபன் பாக்ஸ் வெடி குண்டு ஒன்று சிக்கியது. மேலும் விசாரணையில்

"சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல பள்ளிகூடத்தில் படிக்கும் மாணவர்கள் பயணிக்கும் ஆட்டோவில் குண்டு வைக்க திட்டமிட்டு இருந்ததாகவும், அந்த திட்டம் செயல்படுத்த முடியாமல் போனதாகவும்" தீவிரவாதி தெரிவித்தான்...
உச்சந்தலை வேர்த்து நின்றார் சிதம்பரம்.

- சுவாமிநாதன் பாலசுப்ரமணியன்

Tuesday, November 04, 2008

கோமாளியின் ஓப்பாரி...


என் தம்பிகாக நான் அழுதால்,
60 வருடங்களுக்கு முன் நான் கட்டிக்கொண்டவள்,
60வது ஆயிரம் வருட உறவை அறுத்து எறிய சொல்லுகிறாள்...

தம்பி உனக்காக...
பதறி நானும் கண்ணீர் விட்டால்,
கதறி நானும் ஒப்பாரி வைத்தால்…


கதறிய சத்தம், காது வலிக்கிறது என்று
என்னை அடைத்து விட்டார்கள், சிறையில் இன்று.

தம்பி உனக்கு,
இருக்க இடம் இல்லை என்றாலும் ,
உடுத்த உடை இல்லை என்றாலும் ,
உண்ண உணவு இல்லை என்றாலும் ,
வாழ்கிறாய், மானத்தோடும், வீரத்தோடும்.

நானோ இங்கு,
மானம் இழந்த கோழையாய்...
கோமாளியாய்....

- சுவாமிநாதன் பாலசுப்ரமணியன்

Saturday, November 01, 2008

தமிழினமும், தமிழ் மொழியும்

தமிழினமும், தமிழ் மொழியும் தன் வராலற்றில் ஒரு முக்கிய கால கட்டத்தை எதிர் கொண்டு இருக்கின்றது. நம்முள் ஓற்றுமையும், சமாதானமும், சுயமரியாதையும் குறைந்த அல்லது இல்லாமையின் காரணத்தால் பல இன்னல்களுக்கு ஆளாகிக் கொண்டு இருக்கின்றோம்.



செல்கின்ற திசையையும், நம்முள் இருக்கும் தமிழ் அறியாமையும் கலந்து, அளந்து பார்த்தால் உலகை ஆண்ட தமிழன் அடுத்த தலைமுறைக்கெல்லாம் மாண்டு போவேமோ இல்லை, நம்முடைய தனி தத்துவத்தை இழந்து, "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியில்" பிறந்து எதிர் வரும் நிகழ்காலத்தில் கல்லும், மண்ணுமாய் மாறி அந்த மண்ணோடு மண்ணாய் போய் விடுவோமோ என்று அஞ்ச தோன்றுகிறது.



என்ன செய்ய வேண்டும், நமக்கு இப்பொழுது என்ன வேண்டும். சுதந்திரமா? யாரிடம் இழந்தோம் அதை, நாம் போராடி பெறுவதற்க்கு, பொருளாதாரமா? என்ன வளம் இல்லை நம்மிடத்தில் ஏன் கையை ஏந்த வேண்டும் பிறர் இடத்தில்,
பிறகு என்ன தான் வேண்டும்?

ஓற்றுமை வேண்டும்,
வேற்றுமை மறந்த பாசமும், நேசம் கலந்த பரிவும் வேண்டும்.
நமக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கருவுற்றது தமிழ் அன்னையின் வயிற்றில் தான் என்ற சகோதரத்வம் வேண்டும்.

"தமிழ், மாதா, பிதா, குரு, தெய்வம்" என்று தமிழை முதலில் வைக்க நம் பிள்ளைகளுக்கு கற்று கொடுக்கவேண்டும்.


தொழிலில் தமிழ் வேண்டும்,
செல்லும் இடமெல்லாம் தமிழ் ஆள வேண்டும்,
முதல் காதலியாய் தமிழ் வேண்டும்,
சற்றே தமிழன் என்ற கர்வம் வேண்டும்.


- சுவாமிநாதன் பாலசுப்பிரமணியன்

Monday, October 27, 2008

எனக்கேன் தீபாவளி?

- தம்பியை இழக்கும் தமிழன்



அங்கு என் தம்பியோ தெருவில்,
இங்கு என் வீடோ நவராத்திரி கொலுவில்?

அங்கு என் தம்பியோ வரிசையில் எடுக்கிறான் பிச்சை,
இங்கு எனக்கேன் இந்த சுக போக வாழ்கையில் இச்சை?

அங்கு என் தம்பி வீட்டு உள்-முற்றத்தில் வெடிகுண்டுகள் நித்தம்,
இங்கு எனக்கேன் சிவகாசி பட்டாசுகளின் சத்தம்?

அங்கு என் தம்பி மகள் மாற்றிக்கொள்ள இல்லை ஒரு ஆடை,
இங்கு என் மகளுக்கு ஏன் ஐந்து ஆறு புது ஆடை?

அங்கு என் தம்பி குடும்பம்மோ பசியில் தவிக்கிறது பல காலம்,
இங்கு எனக்கேன் பண்ணிரன்டு வகை பலகாரம்?

மொத்ததில் தம்பி,
அங்கு உன் வாழ்க்கைக்கு இல்லை ஒரு வழி,
இங்கு எனக்கேன் தீபாவளி?


- சுவாமிநாதன் பாலசுப்பிரமணியன்