கல்லூரிக் காலத்தில்
குடும்பம் பற்றி பல கனவுகள்
குறிப்பாக மனைவி
புடவை உடுத்தி
பொட்டு வைத்து
பின்னல் இட்டு
பூ முடிந்து
கூட்டுக் குடும்பதில்
அமைதி அடக்கத்துடன்
அனைவரையும் கவர்ந்தாள்
கனவில் அவள்
பேசியதெயில்லை
பேசியிருந்தால்
பித்தம் அன்றே தெளிந்திருக்கும்
கனவு கல்யாணம் வரை தொடர்ந்தது
உள்ளுர் ஜோதிடரின் தயவால் மணநாளும் வந்தது
விடுப்பெடுத்து விமானம் ஏறி
ஊர் கூட்டி உறவுகள் சூள
அவள் கரம் பற்றி கணவனானேன்
மணமேடையில் அவள் தலை தாழ்த்தி நின்றது
அடக்கத்தாலோ அச்சத்தாலோ அல்ல
அணிந்திருந்த மாலை நகைகளின் பாரத்தால்
என்பது போக போக புரிந்தது
வீட்டில்
தாய் தந்தை அவளிடம் பரிவு காட்ட
அவளும் அவர்களிடம் பாசத்தை கொட்ட
இல்லற இன்பத்தை
இதயம் முழுக்க அனுபவித்தேன்
வீட்டின் சிரிப்பொலிக்கு
வினை விருந்துருவில் வந்தது
வீட்டிற்கு புதிதாக வந்த ஓட்டை கைப்பற்ற
விருந்திற்கு அழைத்தனர் உறவினர்கள்
விருந்தறையில் நான் மட்டும் விற்றிருக்க
சமையலறையில்
என் குடும்ப சரித்திரத்தை
சத்தமில்லாமல் அவளிடம் வாசிக்க
அதில் என்
காதில் விழும்படி சொல்லப்பட்ட
கடைசி வரி
இவன் மட்டும் நல்லவன்
வீட்டில் அதுவரை
பூத்துக்குலுங்கிய
அவளின் புன்சிரிப்பு
விருந்திற்கு பின்
புன்னகையாய் சுறுங்கியது
விடுப்பு முடிந்து விமானநிலையத்தில்
வழியனுப்ப வந்த
அவள் வீட்டினர்கள்
அனுசரித்து நடக்கும் அறிவுரையை
அவளிடம் கூறாமல் என்னிடம் கூற
அதிர்சியோடு அவளுடன்
அமெரிக்கா திரும்பினேன்
முதல் நாள் மாலை
தனிமையின் கொடுமை இனியில்லை என
தனியாத ஆர்வத்துடன்
தாமதிக்காமல் வேலை முடித்து
பூக்களோடு வீடு திரும்ப
அண்டை நாட்டு
அரசன் கைப்பற்றிய
அரண்மனை போல் வீடு
சூரையாடப்பட்டிருந்தது
படித்த புத்தகங்கள்
பழைய பாடல்கள்
படுக்கை விரிப்புக்கள்
பாதுகைகள்
பாத்திரங்கள்
பாதி துணிமணிகள்
பார்வைக்கு தென்படவில்லை
அவளை தவிர நான் ரசித்த எதையும்
அவள் ரசிக்கவில்லை என்பது
விளங்கியது
புதியன வாங்க புறப்பட்டோம்
அந்த அநியாயத்திற்கு
ஆங்கிலத்தில் Shopping என்று பெயர்
கடுங்குளிரிலும் கார் ஓட்டி
கடைகள் பல ஏறி இறங்கி
கதவை நான் திறந்து பிடிக்க
அவள்
கால்களால் கடை அளந்து
கண்களால் பொருள் அளக்க
நான்
கடிவாளம் கட்டிய குதிரையாய் அவள் பின் நடந்து
கால்கடுக்க காத்திருந்து
கடுங்கோபதைக் கட்டுப்படுத்தி
காலம் கடத்த
கடைசியில் கண்டதையும் காட்டி
கட்டாயம் வேண்டுமென அவள் கூற
காரணமே தெரியாமல் அனைத்தையும்
கணிப்பொறியில் கணக்கிட்டு
கடன் அட்டையில் வாங்கி
கார் நோக்கி நடந்த
என் கை முழுக்க குடும்ப பாரம்
இதுவே வாடிக்கையாக
அதலபாதாள்த்தில் இருந்த
அமெரிக்க பொருளாதாரம்
அவ்வாண்டே மீண்டது
வீட்டில்
சீதனமாய் கொண்டு வந்த
சமையல் புத்தகத்தை
அவள் புரட்டிய போதெல்லாம்
நான் சோதனைக் கூட எலியானேன்
கடுகினும் சிறிய பொட்டை
கவனிக்க தவறினாலும்
காதல் இல்லை
பாசம் இல்லை
போன்ற பழிச்சொற்களுக்கு ஆளானேன்
அதுவரை
உலக செய்திகளை மட்டுமே
உற்று கவனித்து வந்த நான்
அன்று முதல்
உடைந்த நகம்
உதிர்ந்த முடி
காதணியின் கற்கள்
காலணியின் அழகு
இவற்றையெல்லாம்
உண்ணிப்பாய் கவனித்து
உடனுக்குடன் தெரிவித்தேன்
அவளை பற்றிய விசயங்களில்
என்னோடு கலந்து பேசி
அவளே முடிவு செய்தாள்
என்னை பற்றிய விசயங்களில்
முடிவு முன்பே எடுக்கப்பட்டு
என்னிடம் அறிவிக்கப்பட்டன
குற்றங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன
குறைகள் அனைத்தும் மறக்கப்பட்டன
பிழைகள் அனைத்தும் ரசிக்கப்பட்டன
மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள்
தொண்ணூறு நாட்கள் கழித்து
திருமணத்திற்கு பின்
முதல் முறையாக
மூளை தன் இருப்பை உணர்த்தி
நான்
எத்தனை முறை ஏமாளியானேன்
என்ற எண்ணிக்கையை எடுத்துரைக்க
எதிர்க்க தயாரானேன் நான்
துரும்பெல்லாம் தூணாக
வீடு போர்க்களமானது
அதுவரை கணவனாக மட்டுமே இருந்த நான்
ஒட்டு மொத்த ஆண் இனத்தின்
பிரதிநிதியாக ஆக்கப்பட்டு
ஆண் இனம் இழைத்த
அனைத்து கொடுமைகளின் பழியும்
என் மீது சுமத்தப்பட
சளைக்காமல் நானும் அதை சமாளிக்க
சற்றும் எதிர்பாரா நேரத்தில்
ஓர் அழிவு ஆயுதம் என்னை தாக்கியது
மூளையை செயல் இழக்க செய்து
பேசும் ஆற்றலை தடுத்து
பயங்கர எரிச்சலை எற்படுத்திய
அந்த ரசாயன ஆயுதத்திற்கு
கண்ணீர் என்று பெயர்
அறிது அறிது மானிடராய் பிறப்பதறிது
அதனினும் அறிது ஆசை இல்லாத பெண்
அதனினும் அறிது அழத் தெரியாத பெண்
அழுகைக்கு பின்
படுக்கை அறையின்
பக்கத்து அறை அவளின்
தற்காலிக தாய் வீடானது
அமைதி முயற்சிக்கு நடந்த
அனைத்துச் சுற்று பேச்சு வார்தைகளும்
தோல்வியில் முடிந்தது
சண்டையை முடிக்க
சரணடைவதைத் தவிர
வேறு வழியெதுமில்லை என
என் பாழாய் போன மனம் பரிதவிக்க
சரி என்ற
ஈறேழுத்து மந்திரத்தை நான்
இடை விடாது உச்சரிக்க
இல்லத்தில் அமைதி திரும்பி
குடும்பம் ஒரு கோவிலானது
நான் ஒரு கோமாளியானேன்
பழைய நண்பர்களை
புதிய கோணத்தில் பார்க்க வைத்தாள்
நண்பனின் மனைவியை இவளுக்கு
பிடித்திருந்தால் மட்டுமே
நட்பு நீடித்தது
ஆசைப்பட்ட அனைத்தும்
வேண்டும்மென அடம் பிடித்தாள்
வேண்டியது கிடைக்காவிட்டால்
வேலை நிறுத்தம்
மனைவி ஒரு மந்திரி
என்பதற்கு என்ன பொருள்
லஞ்சம் இல்லாமல் வேலை
நடக்காது என்று பொருள்
செலவை சமாளிக்க
நான் வீட்டுக் கணக்கை கையில் எடுக்க
அவளோ
நான் வீட்டுக்கு அனுப்பும் கணக்கை கையில் எடுத்தாள்
இனி
சம்பள உயர்வைத் தவிர
வேறு வழியில்லை என
சண்டையிட்டு நான் பெற்ற
சம்பள உயர்வை
தான் வந்த வேளை என்றாள்
மாதங்கள் பல உருண்டன
மணவாழ்வின் அடுத்த கட்டம்
மனைவி கருவுற்றாள்
மகிழ்ச்சி மசக்கை வரை நீடித்தது
அவள் படும் அவஸ்தைகள்
ஆண்களுக்கு இல்லை
படைப்பின் பிழைக்கு
நான் பலியானேன்
இன்னல்களை இடைவிடாது கூறி
இடுப்பு வலிக்கு
இப்பொதே பயந்தாள்
இனி வீட்டு வேலை
இருவருக்கு போது என்றாள்
இட்ட வேலைகளை தட்டாமல் செய்து முடிக்க
என் இடுப்பு அன்றே வலி கண்டது
பிரசவத்திற்கு அத்தை வர
பிழைத்தேன் நான்
தாயும் மகளுமே ஆனாலும்
ஒரே வீட்டில்
இரண்டு பெண்கள்
இணக்கமாக வாழ்ந்தால்
அது எட்டாவது உலக அதிசயமாகத்தான்
இருக்க முடியும்
நான் தின்று செரித்த
என் தாய் மண்னை மகனுக்கு
அடையாளம் காட்டும் ஆவலில்
தாயகம் சென்றோம்
யார் வீட்டில் எத்தனை நாள்
என்னும் விடையில்லா கேள்விக்கு
மாமியார் மருமகளுக்கு இடையிலான
பனிப்போர் பதிலானது
பெயரில் தான் பனி
நிஜத்தில் வெப்பம் என்னை தாக்கியாது
பனிப்போர் பார்வைப் போராகி
பின் சொற்போராய் முடிந்தது
இறந்தகால பண்பாட்டை தாய் கூற
எதிர்கால் பெண்னுரிமையை இவள் பேச
இருவருக்கு இடையில் சிக்கிய என்
நிகழ்கால நிம்மதி நாசமானது
விடுப்பு முடிந்து திரும்பியதும்
விரைந்து பச்சை அட்டைக்கு வின்ண்ப்பித்தேன்
நண்பர்களின் கேள்விக்கு
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என தமிழை துணைக்கழைத்தேன்
சிக்கல்கள் இருந்தும்
சிந்தையில் அவளே
சிம்மாசனம் இட்டு
வீற்றிருக்க காரணம்
வேதாளம் இல்லா
விக்கிரமன் வீண்
-வாசுதேவன்
************
Thursday, December 15, 2005
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அமெரிக்க வாழ்க்கையை இவ்வளவு அழகாக எலுதிய வாசுதேவன்,சுவாமிநாதனுக்கு என்னுடைய பாரட்டுக்கள்.
அனைத்து அமெரிக்க வாழ் பேச்சிலரும் படித்து, தெரிந்து,புரிந்து கொள்ளவேன்டியது இது.
- ராஜ்குமார் ராஜேந்திரன்.
Swami,
This is very nice message for the bachelors...
Also, this looks a good theme for the next skit/movie......
Thanks,
raj
I would like to comment about this wonderful kavithai in Tamil. Can you please explain me how to do as like rajkumar
To do like Rajkumar, Please see this below link
தமிழில் தட்ட உதவும் இனையதளம் - (Website for Typing in Tamil)
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
தமிழில் தட்ட உதவும் அட்டவணை - (Romanized Keystrokes For Typing in Tamil )
http://swambala.blogspot.com/2005/12/romanized-keystrokes-for-typing-in.html
Post a Comment